ஈரோடு கிழக்கு ஓட்டு எண்ணிக்கை; ஏற்பாடுகள் தயார் என கலெக்டர் அறிவிப்பு

2

ஈரோடு; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுங்கரா கூறி உள்ளார்.



ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது; நாளை (பிப்.8) ஒரு கம்பெனி CISF படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். 76 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.அதில் அனைத்தும் பதிவாகும். பாதுகாப்பு பணிக்காக 600 போலீசார் குவிக்கப்பட்டு இருப்பர்.


விவிபேடில் பதிவான விவரங்களும் வேட்பாளர்கள் முன்னிலையில் எண்ணப்படும். ஓட்டு எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.


மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டு அறை, பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் அறை, வேட்பாளர்கள் அறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன.


காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பின்னர் 8.30 மணிக்கு மின்னணு ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 246 தபால் ஓட்டுகள் பெறப்பட்டு உள்ளன.


மொத்தம் ஓட்டு எண்ணிக்கையில் 53 பேர் ஈடுபட உள்ளனர். இவர்கள் தவிர மற்ற அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் இருப்பர். மொத்தம் 17 சுற்றுகள் எண்ணப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement