நட்சத்திர ஹோட்டலில் நடிகர் மீது தாக்குதல்

சென்னை அபிராமபுரம், ஜானகி அவென்யூ, நான்காவது தெருவைச் சேர்ந்தவர் ரிஷிகாந்த், 34. இந்தியன் -2, சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'தி பார்க்' நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். அங்கு, மதுபோதையில் இருந்த நபர், அவரிடம் வீண் தகராறு செய்து தாக்கியதில், ரிஷிகாந்தின் இடது கண் அருகே காயம் ஏற்பட்டது.

அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று திரும்பினார். சம்பவம் அறிந்த தேனாம்பேட்டை போலீசார், நடிகரை தாக்கிய ஹரிஷ், 27, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து, நடிகர் புகார் அளிக்கவில்லை. மேலும், தன்னை தாக்கியது தனக்கு தெரிந்தவர் என்றும், அதனால் நடவடிக்கை எதுவும் தேவையில்லை எனவும், அவர் தெரிவித்தார்.

Advertisement