நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள்
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், நகர்மன்ற தலைவர் மலர்விழி தலைமையில், நகர் மன்ற கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் சிவலிங்கம், நகராட்சி கமிஷனர் அபர்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகள் கொண்டது.
அதில், தி.மு.க.,வைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் 9 பேர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 2 பேர் என, மொத்தம் 11 கவுன்சிலர்கள், நகர் மன்ற கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
பின், 13 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்புடன் கூட்டம் துவங்கியது.தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர் மூர்த்தி பேசும் போது,''எந்த வேலையும் நகராட்சியில் நடைபெறவில்லை. நிதி இல்லை எனக் கூறுகிறீர்கள்,'' என்றார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த, 15வது வார்டு கவுன்சிலர் பரணி பேசுகையில்,''என் வார்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. சாலை ஓரம் கொட்டப்படும் கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை,'' என்றார்.
தி.மு.க., நகர செயலர் குமார் கூறுகையில்,''நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு தேவைகளை கமிஷனரிடம் கோரிக்கை மனுவாக கொடுப்பதில்லை.
மக்களிடம் குறைகள் குறித்தும், நல்லது, கெட்டது குறித்தும் கேட்டு அறிவதில்லை.கமிஷனரை சந்திக்க வரவே மாட்டார்கள்,'' என்றார்.
அதன் பின், அறிவிப்பு எதுவும் இல்லாமல் நகர் மன்ற தலைவர், நகராட்சி கமிஷனர், கவுன்சிலர்கள் வெளியே சென்றனர்.
மதுராந்தகம் நகராட்சியில் உள்ள வார்டு பகுதிகளில், மக்கள் பிரச்னை குறித்து வார்டு கவுன்சிலர்கள் அளிக்கும் மனுக்கள் மீது, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.குறிப்பிட்ட வார்டு பகுதிகளிலேயே, பணிகள் மேற்கொள்கின்றனர்.வார்டுகளில் உள்ள பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காணாததால், தி.மு.க.,வைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள், நகர் மன்ற கூட்டத்தை புறக்கணிப்பு செய்ததாக கூறப்படுகிறது.