அண்ணா நுாற்றாண்டு பூங்காவில் ஆய்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்காவில் கழிப்பறை, விளையாட்டு உபகரணங்கள், இருக்கை, மின் பெட்டிகள், கண்காணிப்பு கேமராக்கள் என எந்த பொருட்களும் மாநகராட்சி நிர்வாகத்தால் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என, அங்கு வருவோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.

அதற்கு ஏற்ப, பூங்காவின் நிலை படுமோசமாக காட்சியளித்தது. இந்நிலையில், கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார். பூங்காவில் நடைபெற்று வரும் துாய்மை செய்யும் பணியை பார்வையிட்டு, பூங்காவில் புதர்மண்டி கிடைக்கும் இடங்களை தூய்மைபடுத்தி சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், பூங்காவில் இயங்கி வரும் உடற்பயிற்சி கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு, உடற்பயிற்சி கருவிகளை நல்ல முறையில் பராமரித்து பயன்படுத்த வேண்டும் எனவும், வருகை பதிவேட்டில் வருகையாளர் குறித்த விவரங்கள் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவன் நகர் மற்றும் செவிலிமேடு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டு, நோயாளிகளின் வருகைப் பதிவேடு மற்றும் மருந்தகம் ஆகியவற்றின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் காலாவதி தேதியை ஆய்வு செய்தார். பின்பு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் அறைகள் மற்றும் பரிசோதனை கூடத்தினை பார்வையிட்டு, பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனைகளையும், அவற்றின் விவரங்களையும் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement