சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு

3

புதுடில்லி அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஹரியானாவைச் சேர்ந்த நான்கு ஏஜன்டுகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில், 104 பேரை முதற்கட்டமாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இந்தியாவுக்கு நாடு கடத்தியது.

அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், பஞ்சாபின் அமிர்தசரசுக்கு கடந்த 5ம் தேதி வந்து சேர்ந்தனர். இந்த, 104 பேரில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தோர் பிரதானமாக இடம்பெற்று இருந்தனர்.

அவர்கள் அமெரிக்க விசா பெறுவதற்காக உள்ளூர் ஏஜன்டுகளை நம்பி, 50 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து, ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

முறையான விசா இன்றி வெவ்வேறு நாடுகள் வழியாக அழைத்து செல்லப்பட்டு, அமெரிக்காவில் அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்த கண்ணீர் கதைகளை பகிர்ந்து கொண்டனர்.

இது போன்ற ஏஜன்ட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பார்லி மென்டில் நேற்று முன்தினம் உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தவர்களில் மூவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியானாவின் கர்னலை சேர்ந்த நான்கு ஏஜன்டுகள் மீது, குடியேற்ற சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புகார் அளித்தவர்கள் மற்றும் குற்றவாளிகளின் அடையாளத்தை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை.

Advertisement