ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் விரைவில் அறிவிப்பு

சென்னை:'ஆட்டோகளுக்கான புதிய கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும்' என, போக்குவரத்து கமிஷனர் சுன்சோங்கம் ஜடக் சிரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 12 ஆண்டுகளாக கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதற்கிடையே, முதல், 1.8 கி.மீ., துாரத்துக்கு, 50 ரூபாய் என புதிய ஆட்டோ கட்டண முறையை, கடந்த 1ம் தேதி முதல் ஆட்டோ ஓட்டுநர்களே அமல்படுத்தினர்.

ஆட்டோ கட்டணத்தை ஓட்டுநர்கள் தன்னிச்சையாக நிர்ணயம் செய்வது விதிமீறல், என போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில், கமிஷனர் சுன்சோங்கம் ஜடக் சிருவை, உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கத்தின் பொதுச்செயலர் ஜாஹிர் உசைன் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

ஆட்டோ மீட்டர் கட்டண நிர்ணயம் குறித்து, விரைவாக முடிவெடுக்க வேண்டும் என, தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த கமிஷனர், 'மீட்டர் கட்டண அறிவிப்பு, இறுதி கட்டத்தில் இருக்கிறது.

'அதிகாரிகள் நிலையில், பேச்சு முடிவடைந்த சூழலில், விரைவில் அமைச்சர் தலைமையில் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஆலோசித்து அறிவிக்க வாய்ப்புள்ளது' என தெரிவித்துள்ளார்.

இதை, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement