திருமண நிகழ்வில் பங்கேற்கும் பெண்கள் அதிக தங்க வளையல்கள் அணிவது வழக்கம் சுங்கத்துறைக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
சென்னை:'இந்தியாவில் திருமண நிகழ்வில் பங்கேற்கும் பெண்கள், அதிகளவில் தங்க வளையல்கள் அணிவது வழக்கம்' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பறிமுதல் செய்த 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சுங்கத்துறை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் சபீனா முகமது மொய்தீன். இவரது கணவர் அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2023 டிசம்பரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க, அபுதாபிக்கு சபீனா சென்றிருந்தார்.
திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு, நாடு திரும்பிய அவரை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர் கையில், 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்கள் அணிந்திருந்ததை சுட்டிக்காட்டி, இது விதிகளுக்கு முரணானது என்று கூறி, அவற்றை பறிமுதல் செய்தனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அந்த வளையல்களை, தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என, சுங்கத்துறைக்கு சபீனா மனு அனுப்பினார். அந்த மனுவுக்கு, எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதால், தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த தங்க நகைகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் சபீனா வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.சந்தானராமன் ஆஜராகி, ''பேக்கேஜ் விதிகளின்படி, குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தங்கத்தை கொண்டு வர முடியும்.
''குறிப்பிடப்பட்ட அளவுக்கு அதிகமாக எடுத்து வந்ததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கான சுங்க வரியாக, 7 லட்சத்து 60,903 ரூபாய் செலுத்த வேண்டும்,'' என்றார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சதீஷ்சுந்தர் ஆஜராகி, ''மனுதாரர் அணிந்து வந்தது பழைய தங்க நகைகள். திருமண நிகழ்வுக்கு சென்றதால் தான், அவற்றை அணிந்துள்ளார். நகைகளை மறைத்து எடுத்து வரவில்லை; அதை அணிந்து கொண்டு தான் வந்துள்ளார்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்தியாவில் திருமண நிகழ்வின் போது, 10 தங்க வளையல்கள் அணிவது என்பது மரபு. 10 தங்கச் சங்கிலிகள் அணிந்து இருந்தாலோ, நகைகளை மறைத்து வைத்திருந்தாலோ சந்தேகம் கொள்ளலாம்; அவற்றை பறிமுதலும் செய்யலாம்.
ஆனால், மனுதாரர் தங்க வளையல்களை ரகசியமாக மறைத்து எடுத்து வரவில்லை. அவ்வாறு இருக்கும் போது, அதை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளின் செயல் முறையற்றது. எனவே, தங்க நகைகளை ஒப்படைக்கக் கோரி, மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை ஏழு நாட்களில் பரிசீலித்து, அவரிடம் நகைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
-
வந்தே பாரத் ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு
-
நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள்
-
இந்தியா பதிலடி
-
மூணாறில் 'டபுள் டெக்கர்' பஸ்