'சோழர்கள் இன்று' நுாலுக்கு தமிழ் வளர்ச்சி துறை பரிசு

சென்னை:தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2023ம் ஆண்டுக்கான சிறந்த நுாலுக்கு பரிசு வழங்கும் விழா, சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலை அரங்கில் நடந்தது.

விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் பேசுகையில், ''ஒவ்வொரு ஆண்டும், எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படுகின்றன.

''நுால் ஆசிரியருக்கான பரிசுத்தொகை 50,000 ரூபாயாகவும், பதிப்பகத்தாருக்கான பரிசுத்தொகை, 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களை தவிர்த்து, இந்த முறை புதிய படைப்பாளிகளுக்கு பரிசுகள் வழங்குகிறோம்,'' என்றார்.

தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சிறந்த நுால் ஆசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும் மற்றும் அகழாய்வு என்ற பிரிவில், 'தாமரை பிரதர்ஸ் மீடியா' பதிப்பகத்தின், 'சோழர்கள் இன்று' புத்தகம் தேர்வானது. நுால் தொகுப்பாசிரியர் சமஸ், பரிசை பெற்றுக் கொண்டார்.

மேலும், சுவாசம் பதிப்பகம் வெளியிட்ட, பிரிவினையின் பெருந்துயரம்; டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்ட அடையாற்றுக்கரை உட்பட 33 நுால்களின் ஆசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சத்தியப்ரியா நன்றி கூறினார். விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் ராஜாராமன் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement