காலாவதி மாத்திரைகள் ஏரியில் வீச்சு




ராசிபுரம் : ராசிபுரம் - சேலம் சாலையில், 80 ஏக்கர் பரப்பளவில் ராசிபுரம் ஏரி உள்ளது. இங்கு, மட்காத குப்பையை, அருகில் உள்ளவர்கள் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில சமயம், தீ வைத்து விடுகின்றனர். கடந்த வாரம் இதுபோல் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த முள் செடிகளுக்கும் பரவியது. நேற்றும், இதேபோல் மற்றொரு பகுதியில் தீ பரவியது. இந்நிலையில், பழைய சேலம் சாலை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த சாலையை ஒட்டி ஏரியின் கரையோர பகுதியில் காலாவதியான மருந்து பாட்டில்கள், மாத்திரை அட்டைகள் குவியல், குவியிலாக கொட்டப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மருத்துவ கழிவுகளை கொட்டாமல் இருந்தனர். தற்போது மீண்டும் மாத்திரைகளை கொட்டி சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட
சுகாதாரத்துறையினர் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Advertisement