ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளுக்கு தடை தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை:'தமிழகத்தில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில், குறிப்பிட்ட பகுதிகளில் அதிவேக விசைப்படகுகளை இயக்க தடை விதிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை, கடற்கரைகளில் கடல் ஆமைகள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கி வருவது பற்றி, நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரித்த தீர்ப்பாயம், 'ஆமைகள் இறப்பை தடுக்க, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை' என, அதிருப்தி தெரிவித்தது.

இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:

'ஆலிவ் ரிட்லி' எனப்படும் அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அனுமதியின்றி, 'ட்ராலர்' எனப்படும், அதிவேக விசைப்படகுகளை, தடை செய்யப்பட்ட பகுதியில் இயக்கிய, 172 படகு உரிமையாளர்களின் மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது; 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஆந்திர மீனவர்களும், அதிவேக விசைப்படகுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இயங்கும் அதிவேக விசைப்படகுகள் மீது, நடவடிக்கை எடுக்கப் படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாணை



தலையில் காயம், அதிர்ச்சி மற்றும் மூச்சு விட முடியாமல் கடல் ஆமைகள் உயிரிழந்ததாக, உடல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த, 2015 முதல் கடல் ஆமைகள் பாதுகாப்புக்காக, பல்வேறு நடவடிக்கை களை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

தமிழக அரசின் அறிக்கையில், எந்த முன்னேற்றமும் இல்லை. ஆமைகள் இனப்பெருக்க காலமான, ஜனவரி முதல் ஏப்ரல் வரை, குறிப்பிட்ட பகுதியில் விசைப்படகுகளை இயக்க தடை விதித்து, 2015ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, ஏன் அமல்படுத்தவில்லை என்பதற்கு பதில் இல்லை.

கடல் ஆமைகள் இறப்புக்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கு தீர்வு காண, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அபராதம் விதிக்க வேண்டியிருக்கும்.

விசாரணை



ஆமைகள் இனப்பெருக்க காலத்தில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் அதிவேக விசைப்படகுகளுக்கு அபராதம், நிரந்தர தடை விதிக்க, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வரலாம்,

ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜனவரி முதல் ஏப்ரல் வரை, ஆமைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், அதிவேக விசைப் படகுகளை இயக்க அரசு தடை விதிக்க வேண்டும். இதை, தமிழக அரசின் தலைமை செயலர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் மார்ச் 18ல் நடக்கும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement