வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாப பலி

திருவெறும்பூர்:அண்ணனை பள்ளிக்கு வழியனுப்ப, பணிப்பெண்ணுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை, வேனில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பெல் நிறுவன குடியிருப்பில் வசிப்பவர் கில்ஸ்டன் ஆப்ரகாம். கேரளாவைச் சேர்ந்த இவர், 'பெல்' நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி மெர்லின் மேத்யூ. கல்லுாரி உதவிப் பேராசிரியை.

தம்பதிக்கு எய்டன், 5, மற்றும் ஒன்றரை வயதில் எரிக் என இரு குழந்தைகள் இருந்தனர். எய்டன் அப்பகுதி மான்போர்ட் பள்ளியில் படிக்கிறார். நேற்று காலை எய்டனை அழைத்துச் செல்ல, வீட்டு வாசலுக்கு வந்த தனியார் வேனில் ஏறச் சென்றார். வீட்டு பணிப்பெண் வசந்தா அவரை அழைத்து வந்தார். அவர்களை பின் தொடர்ந்து வந்த குழந்தை எரிக், வேனுக்கு முன் பகுதிக்கு சென்ற நிலையில், இதை கவனிக்காத டிரைவர் சதீஷ்குமார் வேனை நகர்த்தினார்.

குழந்தை மீது வேன் சக்கரம் ஏறி, இறங்கியதில், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. பெல் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Advertisement