பெண் வெட்டிக்கொலை கணவர் கவலைக்கிடம்

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், படுகாயம்அடைந்த அவரது கணவரான தி.மு.க., பிரமுகர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பத்துார் மாவட்டம், மேற்கத்தியனுார் அடுத்த கோ.புளியம்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி, 50; தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் பஞ்., துணைத்தலைவராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி, 40. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் திருப்பதி, வசந்தி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கதவை தட்டினர். திருப்பதி கதவை திறந்தபோது, அங்கு நின்றிருந்த இருவர் திருப்பதியை சரமாரியாக வெட்டினர்.

அவரது அலறல் கேட்டு வந்த வசந்தியையும் சரமாரியாக வெட்டி தப்பினர். வசந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்பதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருப்பத்துார் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், திருப்பதிக்கும் வழித்தடம் தொடர்பான தகராறு இருந்ததாகவும், இதனால் கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகத்தின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement