காபிக்கொட்டை விலை கிலோவுக்கு ரூ.120 உயர்வு
சேலம்:தமிழகத்தில் போடி, கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு, கொல்லிமலை, வத்தல்மலை பகுதிகளில், 88,142 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. சர்வதேச அளவில் காபி தேவை அதிகரிப்பால், இந்திய காபிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. கடந்த, 2023ல், 3.76 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2024ல், 4.03 லட்சம் டன்னாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதனால், இதுவரை இல்லாத அளவு, காபி விலை அதிகரித்து வருகிறது.
ஏற்காடு மலைப்பகுதிகளில், 17,354 ஏக்கரில் அராபிகா, 148 ஏக்கரில், ரொபாஸ்டா காபி வகை பயிரிடப்படுகிறது. இதிலிருந்து ஆண்டுக்கு, 4,000 டன் காபிக்கொட்டைகள் உற்பத்தியாகின்றன. கடந்த டிசம்பரில் காபி அறுவடை துவங்கியது. அப்போது, அராபிகா காபிக்கொட்டை கிலோ, 400 ரூபாயாக இருந்த நிலையில், ஒரே மாதத்தில் தற்போது, 520 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. அதேபோல, 200 ஆக இருந்த அராபிகா செர்ரி, 270 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த காபி சிறு, குறு விவசாயிகள் கூட்டமைப்பு செயலர் சந்திரன் கூறுகையில், ''காபிக் கொட்டை விலை அதிகரித்துள்ளதால், சிறு விவசாயிகள்கூட, தற்போது காபி உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்,'' என்றார்.