20 மீனவருக்கு விசைப்படகு ஓட்டுநர் உரிமம்
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம் மீன் வளத்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை, மூக்கையூர், வாலிநோக்கம், தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5000 மீன் பிடி விசைப்படகுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
மீன் பிடி படகை ஓட்டுபவர்களுக்கு இதுவரை உரிமம் வழங்கப்படாமல் இருந்தது. நான் முதல்வன் நிறைவு பள்ளி திட்டத்தில் ஜெயலலிதா மீன் வள பல்கலையின் ஒரு அங்கமான உச்சிப்புளியை அடுத்த அரியமான் பகுதியில் செயல்பட்டு வரும் மீனவ தொழில் காப்பகம் மற்றும் தொழில் சார் பயிற்சி இயக்குநரகம் தமிழ்நாடு மீன் வளத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து மீனவ படகு ஓட்டுநருக்கான பயிற்சி ஒரு வார காலம் வழங்கப்பட்டது.
தேர்ச்சி பெற்ற 60 மீனவர்களில் முதற்கட்டமாக 15 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக 20 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் பயிற்சி பெற்ற மீனவர்களை நடுக்கடலில் படகை இயக்க வைத்து ஆய்வு செய்து பின் ஓட்டுநர் உரிமம் வழங்கினர்.