புதுச்சேரியில் மலர் கண்காட்சி துவங்கியது பார்வையிட குவிந்தனர் பொதுமக்கள்

புதுச்சேரி : புதுச்சேரியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், மூன்று நாள் மலர் கண்காட்சி நேற்று துவங்கியது.

தாவரவியல் பூங்காவில் நேற்று மாலை நடந்த விழாவில், 'வேளாண் விழா-2025' மற்றும் 35வது மலர், காய், கனி கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, கல்யாண சுந்தரம், அரசு செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில், பார்வையாளர்களை கவரும் வகையில் மலர்களால் விலங்குகள், பறவைகள், ரயில் போன்றவை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

வீரிய ரக காய்கறிகள், கனிகளின் ரகங்கள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் அரங்குகள், மலர் ரங்கோலி, தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்களின் விற்பனை அரங்குகள், பல்வேறு அரசு நிறுவனங்கள் சார்பில் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

இசை நடன நீரூற்று பார்வையாளர்களை கவர்கிறது. குழந்தைகளுக்கான சிறுவர் உல்லாச ரயில் இயக்கப்படுகிறது.

பால்சம், காலண்டுலா, செலோசியா, கோலியஸ், காஸ்மோஸ் உள்ளிட்ட 19 வகைகளில், 36 ஆயிரம் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இன்று, நாளையும் வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தரங்கு நடக்கிறது.

கண்காட்சியில், தொட்டி வளர்ப்பு, கொய் மலர்கள், காய்கறிகள், கனிகள், அலங்கார செடிகள், தோட்டங்கள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் மற்றும் தானிய ரகங்கள் என, 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதிக பிரிவுகளில் பரிசுகள் பெறும் ஆண் மற்றும் பெண்ணிற்கு மலர் ராஜா மற்றும் மலர் ராணி பட்டம் வழங்கப்படும்.

மூன்று நாள் வேளாண் விழா



நேற்று துவங்கிய 35வது மலர், காய், கனி கண்காட்சி, நாளை (9ம் தேதி) வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இன்று (8ம் தேதி) மற்றும் நாளை (9ம் தேதி) ஆகிய இரு தினங்களில் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 வரை கண்காட்சியை பார்வையிடலாம்.

சிறை சார்பில் அரங்கு



கண்காட்சியில் காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகள் பயிரிட்ட காய்கறிகள், கனிகள் சிறை நிர்வாகம் மூலம் அரங்கம் அமைக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும், அவர்கள் தயார் செய்த பாக்குமர தட்டு, கிளாஸ், கேக் உள்ளிட்ட பேக்கரி உணவு பொருட்கள், சிற்பங்கள், மணற்சிற்பங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Advertisement