பிப்., 12ல் பிரதமர் அமெரிக்கா பயணம்

புதுடில்லி: பிரதமர் மோடி வரும் பிப்., 12 மற்றும் 13ம் தேதி அமெரிக்கா சென்று அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறினார்.

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப் அதன்பின் பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அமெரிக்கா வருவதற்கும் அழைப்பு விடுத்தார். இதற்கான பணிகளில் வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டது.

பிரதமர் மோடி பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்ஸ் செல்கிறார். அங்கு பாரிசில் நடக்க உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்று திரும்ப திட்டமிடப்பட்டது.

இந்த தேதிகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர். அதன் படி பிப்., 12ல் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். பிப்., 13ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் விவகாரம், ராணுவத்துக்கான ஆயுதங்கள் கொள்முதல், வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளனர்.

Advertisement