அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்: அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றி அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.மற்ற நாட்டு பொருட்களுக்கு அதிகமான இறக்குமதி வரி விதித்து வருகிறார். இந்நிலையில், அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்கா வர்த்தகப் போரின் விரிவாக்கமாக, அடுத்த வாரம் பரஸ்பர வரி விதிக்க திட்டமிட்டுள்ளேன். இதனால் மற்ற நாடுகளுடன் நாம் சமமாக நடத்தப்படுவோம். நாங்கள் அதிகமாக வரி வசூல் செய்ய விரும்பவில்லை.
இது நியாயமான வழி தான் என்று நான் நினைக்கிறேன். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூல் செய்கிறார்கள். நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூல் செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் கனடா, மெக்சிகோ நாட்டு பொருட்களுக்கு புதிதாக 25 சதவீதம் இறக்குமதி வரியை டிரம்ப் விதித்தார். கடைசி நேரத்தில், அவர் புதிய இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தம் செய்து உத்தரவிட்டார் என்பது குறப்பிடத்தக்கது.