பனிமூட்டம், சிக்னல் கோளாறு ரயில்கள் சேவையில் பாதிப்பு

சென்னை: அதிகாலையில் நிலவும் பனி மற்றும் சிக்னல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களின் சேவையில், நேற்று பாதிப்பு ஏற்பட்டது.


நாட்டில், குளிர்காலம் நிலவுவதால், அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால், வடமாநிலங்களில் இருந்தும், தென்மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு அதிகாலையில் வரும் விரைவு ரயில்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வருகின்றன.


குறிப்பாக, டில்லியில் இருந்து சென்னை வரும் தமிழ்நாடு, ஜி.டி., மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, கொல்லம் விரைவு ரயில்கள், வழக்கத்தைவிட நேற்று சற்று தாமதமாக வந்தன.


அதேபோல், சென்னை புறநகரில் இயக்கப்பட்ட மின்சார ரயில்களும் வழக்கத்தைவிட, மெதுவாகவே இயக்கப்பட்டன. இதனால், மின்சார ரயில்கள் சேவையும் பாதிப்பு ஏற்பட்டது.

சிக்னல் கோளாறு



பல்லாவரம் - பரங்கிமலை ரயில் பாதை இடையே இருக்கும் சிக்னல் ஒன்றில், நேற்று காலை 8:00 மணிக்கு, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.


இதையடுத்து, செங்கல்பட்டு - தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்ல வேண்டிய மின்சார ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.


இதனால், குரோம்பேட்டை, பல்லவாரம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம் உள்ளிட்ட நிலையங்களில், மின்சார ரயில்களுக்காக, 30 நிமிடங்களுக்கு மேல் பயணியர் காத்திருந்தனர்.


சிக்னல் கோளாறை சரி செய்ததும், காலை 8:45 மணிக்கு பின், மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

அதேபோல், செங்கல்பட்டு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், பனிமூட்டத்தால் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

இதனால், சிங்கபெருமாள் கோவில், பேரமனுார், மறைமலைநகர் பகுதியில் உள்ள ரயில்வே 'கேட்'டுகள் 45 நிமிடங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தன.

இதன் காரணமாக பள்ளி மாணவ -- மாணவியர், பணிக்குச் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள், கடும் அவதியடைந்தனர்.


இதில் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் 100க்கும் மேற்பட்டோர், மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இவர்களை, ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் சமாதானம் செய்து, போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.


ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால், பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சில வழித்தடங்களில் ரயில்களின் வேகம் குறைத்து இயக்கப்படுகிறது.

வழக்கமாக 90 முதல் 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள், நேற்று 50 முதல் - 60 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டன. இருப்பினும், பெரிய அளவில் ரயில்களின் சேவையில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement