வேளாண் பல்கலையில் மலர் கண்காட்சி; இரண்டு லட்சம் பூக்களுடன் இன்று துவக்கம்

கோவை; கோவை, வேளாண் பல்கலை சார்பில், தாவரவியல் பூங்காவில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்களுடன், 7வது மலர்க் கண்காட்சி இன்று துவங்குகிறது.

பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:

வரும் 12ம் தேதி வரை மலர்க்கண்காட்சி நடக்கிறது. செலோசியா, மல்லிகை, செண்டுமல்லி, சொர்க்க பறவை, லிஸியான்தஸ், ஜிப்ஸோபில்லா என தமிழகத்தின் அனைத்து வகை மலர்கள் மற்றும் அரிய வகை மலர்கள் இடம்பெறுகின்றன.

மாநில பட்டாம்பூச்சியான தமிழ் மறவன் பட்டாம்பூச்சியின் உருவம், மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 'மழைக்காடுகள்' உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளோம்.

பள்ளி மாணவர்கள்



சுற்றுச்சூழல் முக்கியத்துவம், மலர்களில் வணிக வாய்ப்பு என குழந்தைகள் முதல் தொழில்முனைவோர் வரை, அனைத்துத் தரப்பினருக்குமான கண்காட்சியாக இது இருக்கும்.

கடந்த ஆண்டு கொய்மலர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன.

தற்போது, 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் வகையில், சிறு தொட்டிகளிலேயே செடிகளை வளர்த்து, 15 நாட்களும் மலர் இருக்கும் வரை திட்டமிட்டு, வடிவமைத்துள்ளோம். உலர் மலர்களின் அலங்காரமும் இடம்பெறுகிறது. குழந்தைகளை நிச்சயம் கவரும். 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து அழைப்பு வந்துள்ளது. பள்ளிகளில் இருந்து நேரடியாக அழைத்து வரவுள்ளனர்.

மாடித்தோட்டம்



வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கும் கண்காட்சி உதவியாக இருக்கும். பூக்கள், செடிகள் காட்சிக்கு மட்டுமல்லாது விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

மாடித்தோட்ட 'கிட்' வழங்கப்படும். போன்சாய் மரங்கள், வீட்டுக்குள் வளர்க்கும் செடிகள் என பார்வையாளர்களைக் கவரும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. தோட்டக்கலை, வேளாண், வங்கிகள், கல்வி நிறுவனங்கள் சார்ந்த அரங்குகள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை, மலர்க் கண்காட்சியைப் பார்வையிடலாம். வார இறுதி, தொடர் விடுமுறை காரணமாக பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement