தடையை மீறி பேனர்கள் வைப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் விதிகளை மீறி சாலையை சேதப்படுத்தி, போக்குவரத்திற்கு இடையூராக வைக்கப்பட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து பேனர்களால் விபத்து அபாயம் உள்ளது.
புதுச்சேரியில் பேனர் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சாலையில் செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது.
பேனர் விவகாரம் தொடர்பாக, கோர்ட் பல முறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரி - கடலுார் சாலையில், ஏம்பலம் தொகுதி காங்., பிரமுகர் ஒருவரின் பிறந்த நாளுக்காக, கிருமாம்பாக்கம் எல்லையில் துவங்கி கந்தன்பேட் சந்திப்பு வரை விதிகளை மீறி சாலையின் இரு புறமும் வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
சாலையை சேதப்படுத்தி நுாற்றுக்கும் மேற்பட்ட கொடி கம்பங்களும் நடப்பட்டுள்ளது. பல இடங்களில் பேனர்களும், கொடி கம்பங்களும் உயர் மின்னழுத்த பாதைகளின் மிக அருகில் இருப்பதால், மின் விபத்து அபாயமும் உள்ளது. அதேபோல், பல இடங்களில் பேனர்களும், கொடி கம்பங்களும் சாய்ந்து கிடப்பதால் சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஒட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
விதிமீறலை தடுக்க வேண்டிய முக்கிய துறை அதிகாரிகளும் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தில், கிருமாம்பாக்கம் போலீசார், பெயரளவில் ஒரு வழக்கு போட்டுள்ளனர்.
குறிப்பாக, கடலுார் எஸ்.என்.சாவடி அஜித்குமார், 28; வில்வநகர் அமர்நாத் 29; ஆகியோர் மீது, கன்னியக்கோவிலில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக வழக்கை போட்டுள்ளனர். காவல் நிலையம் அருகே இருந்த பேனர்களை விட்டு, ஒரு கி.மீ., தொலைவில் இருந்த பேனர் வைத்தவர் மீது வழக்கு போட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும், புதுச்சேரி - கடலுார் சாலையில், கோர்ட் உத்தரவையும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விபத்து ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள, பேனர்களை அகற்றி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.