குடியிருப்பு பகுதியில் நிறுத்தியுள்ள வாகனங்களில் என்னவோ நடக்குது! சிவானந்தா காலனி மக்கள் அச்சம்

கோவை; சிவானந்தா காலனி பகுதியில், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிவானந்தா காலனி, மாநகராட்சி பூங்கா அருகில் சாலையின் இருபுறமும், வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியில் குடியிருப்போரின் வாகனங்கள் சென்று வர, இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வாகனங்களை நிறுத்தி செல்பவர்கள், மாதக்கணக்கில் வாகனங்களை எடுப்பதில்லை. அப்பகுதியினர் கேட்டால், தகாத வார்த்தைகளால் மிரட்டுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியினர் தெரிவித்ததாவது:

கார், ஆட்டோ, லோடு வாகனம், டிராவல்ஸ் வாகனங்கள் என, பல வாகனங்களை சாலையில் மாதக்கணக்கில் நிறுத்தி செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை இந்த வாகனங்களில் பதுக்கி, இங்கிருந்து பிற இடங்களுக்கு சப்ளை செய்வதாக சந்தேகிக்கிறோம்.

அதற்கேற்ப, கல்லுாரி மாணவர்களின் நடமாட்டமும் சமீப காலமாக இங்கு அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில், இந்த வாகனங்களில் சட்ட விரோத செயல்கள் நடக்கின்றன. கேட்டால் தகராறு செய்கின்றனர்.

போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் வரும் நேரத்தில் மட்டும் வாகனங்களை எடுத்துச்செல்கின்றனர். பின்னர், மீண்டும் நிறுத்திச் செல்கின்றனர். போலீசார், மாநகராட்சி நிர்வாகத்தினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement