தினமலர் செய்தி எதிரொலி கொசுவை கட்டுப்படுத்த உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரியில் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும், கொசு தொல்லை அதிகரித்தது தொடர்பாக, 'தினமலர் நாளிதழில்' நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தலின்படி, கொசு தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன், தலைமைச் செயலர் சரத்சவுகான் தலைமையில் சிறப்பு கலந்தாய்வு நடந்தது.
கூட்டத்தில், சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுச்சேரியில் 2021ல் இருந்து கொசுக்களால் பரவும் மலேரியா காய்ச்சல் இல்லை. டெங்கு 20 சதவீதம் குறைந்துள்ளது. 2024 ல் டெங்கு பாதிப்பால் இறப்பு இல்லை. பைலேரியா மற்றும் மலேரியா நோய் கிருமி புதுச்சேரியில் உள்ள கொசுக்களில் காணப்படவில்லை. ஆனால், டெங்கு கிருமி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இக்கூட்டத்தை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் கொசுக்களை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உள்ளூர் நிர்வாகத்துக்கும், சுகாதாரத் துறைக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த ஆய்வு கூட்டம் தொடர்பாக, சுகாதார துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமக்கள், தங்களது வீடுகளில் தேவையற்ற தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதார ஊழியர்கள் வீடுகளை ஆய்வு செய்ததில், பல வீடுகளில் பிளாஸ்டிக் டேங்குகள் திறந்தும், கீழ் நிலை தொட்டிகள் சரியாக மூடாமலும் உள்ளன. கழிவறை பைப்புகள் திறந்தே உள்ளன. வாய்க்கால்களில் குப்பைகள் கொட்டப்பட்டு, அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஓடாமல் தேங்கி கொசு உற்பத்தியாக காரணம் ஆகின்றன. இதனால், கொசு உற்பத்தியை குறைக்க தண்ணீர் தொட்டிகளை சரியாக மூடி வைக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு தீவிர நடவடிக்கைகளை கொம்யூன் பஞ்சாயத்துடன் புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. கொசுக்களால் உண்டாகும் நோய்களை கட்டுப்படுத்த, பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
சுகாதாரத்துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளால், கொசுக்களால் ஏற்படும் நோய்களை விரைவில் கட்டுப்படுத்தி விடலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.