பிளஸ்1, பிளஸ்2 செய்முறை தேர்வு; 68 ஆயிரத்து 472 பேர் பங்கேற்பு

கோவை; கோவை மாவட்டத்தில் செய்முறை தேர்வு நேற்று துவங்கிய நிலையில், பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள், 68 ஆயிரத்து, 472 பேர் எழுதுகின்றனர்.

மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் - ஏப்., மாதங்களில் நடக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், நேற்று பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது.

வரும், 14ம் தேதி வரை ஒரு பிரிவாகவும், 15 முதல், 21ம் தேதி வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடக்கிறது. கோவை கல்வி மாவட்டத்தில், 190 மையங்களிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 67 மையங்களிலும் என, 257 மையங்களில் இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு காலை, மதியம் என இரு வேளைகளில் தேர்வு இடம்பெறுகிறது.

பிளஸ்1 செய்முறை தேர்வில், 34 ஆயிரத்து, 516 பேரும், பிளஸ்2 தேர்வில், 33 ஆயிரத்து, 956 பேரும் என, 68 ஆயிரத்து, 472 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மாணவர்கள் பகலில் தேர்வு எழுதவும், இரவில் படிக்கவும், மின் தடையை தவிர்த்து, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க, மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement