அதே அடி... அதே தோல்வி... பரிதாப நிலையில் டில்லி காங்கிரஸ்

29

புதுடில்லி; டில்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.



தேசிய அரசியலில் தலைநகர் டில்லி ஒரு முக்கிய கேந்திரம். தலைநகர் அரசியல் மற்றும் அரியணை என்பது மற்ற மாநிலங்களிலும் தனித்துவம் மிக்க ஒன்று. அப்படிப்பட்ட சிறப்பு மற்றும் எதிர்பார்ப்புமிக்க தலைநகர் டில்லியில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.


தேர்தல் முடிவுகளில் பா.ஜ.,அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியை பிடிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆம் ஆத்மி இருந்தாலும் அரியணையை பறிகொடுத்துள்ளது. தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ., இடையே தான் போட்டி என்பது ஓட்டுப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தெரிந்துவிட்டது.


டில்லி தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி என்றாலும் மெகா யுத்தம் என்பது ஆம் ஆத்மிக்கும், பா.ஜ.,வுக்குமே என்று தொடக்கம் முதலே அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதை மெய்ப்பிக்கும் விதமாகவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் இருந்தன.


ஓட்டுப்பதிவு முடிந்து, தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் காங்கிரஸ் நிலை படுபாதாளத்தில் உள்ளது. தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்து கட்சியின் இருப்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.


மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் பின்தங்கி இருக்கிறது. பின்தங்கியது என்பதை விட ஒட்டுமொத்தமாகவே காணாமல் போய் இருப்பது போன்ற சூழலே நிலவுகிறது. 2025 தேர்தல் மட்டும் அல்லாமல் 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி என்பது பூஜ்யம்.


தற்போது பத்லி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளரான மாநில தலைவர் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். பின்னர் சற்றுகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பின்னுக்கு தள்ளப்பட்டார். தற்போது 3ம் இடத்தில் உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக சட்டசபை தேர்தலில் மெகா தோல்வியை சந்தித்துள்ள காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை தற்போதைய முடிவுகள் அளித்திருக்கின்றன.

Advertisement