ஆம் ஆத்மியின் தோல்வி: கெஜ்ரிவாலின் முன்னாள் நண்பர்கள் சொல்வது என்ன?

3


புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்துள்ளது. இது குறித்து கெஜ்ரிவாலின் முன்னாள் நண்பர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


கடந்த 2013ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை துவக்கினார். அப்போது அவர்களுடன் பக்கபலமாக இருந்த தலைவர்களில் கவிஞர் குமார் விஸ்வாஸ் மற்றும் யோகேந்திர யாதவ் முக்கியமானவர்கள்.

ஆனால், அக்கட்சி ஆட்சி அமைத்ததும், கருத்து வேறுபாடு காரணமாக குமார் விஸ்வாஸ் கட்சியை விட்டு வெளியேறி விட்டார். அதற்கு முன்னதாகவே, யோகேந்திர யாதவை கட்சியிலிருந்து கெஜ்ரிவால் நீக்கி விட்டார்.


குமார் விஸ்வாஸ் தற்போது சமூகப் பணியில் ஈடுபட்டு உள்ளார். யோகேந்திர யாதவ் தனியாக விவசாயிகள் அமைப்பை ஒன்றை உருவாக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது ஆம் ஆத்மியின் தோல்வி குறித்து இருவரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அது குறித்த விவரம்:
குமார் விஸ்வாஸ்:
பா.ஜ.,வுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். 13 ஆண்டுக்கு முன்பு, இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் மறுமலர்ச்சி வந்தது. அந்த போர், போராட்டத்தால் நல்லது நடந்து இருக்க முடியும். ஆனால், துரியோதனனைப் போல் செயல்பட்ட, ஒரு பாதுகாப்பற்ற மற்றும் வெட்கங்கெட்ட மனிதனால், வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு இது முதல் தோல்வி என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.


யோகேந்திர யாதவ்
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தத் தோல்வி மாற்று அரசியலை எதிர்பார்த்த அனைவருக்கும் பின்னடைவு. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்பட்ட பின்னடைவு. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அவசியம் என்றாலும், அது மட்டும் போதாது என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஊழலை எதிர்ப்பவர்கள், தங்கள் மீதான பிம்பத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதையும், பா.ஜ.,வின் கொள்கைகளை நகல் எடுப்பதால் மட்டும் அதனை தோற்கடித்து விட முடியாது என்பதையும் காட்டுகிறது. 'இண்டியா' கூட்டணித் தலைவர்கள் ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டுவிட்டு, நாட்டை பாதுகாக்க மாற்றுத்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், ''தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு என்பது ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல, 10 -12 ஆண்டுகளுக்கு மாற்று அரசியலுக்காக கட்சியை ஆரம்பித்தவர்களுக்கும் தான். எதிர்க்கட்சிகளுக்கும் பின்னடைவு. கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி என்பது மிகப்பெரிய பின்னடைவு. ஆம் ஆத்மியின் எதிர்காலம் குறித்து மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. இனி அவர்களின் கவனம் பஞ்சாபிற்கு செல்லும். அங்கு ஆம் ஆத்மியை உடைக்க முயற்சிப்பார்கள். அங்கு நிலைத்து நிற்பது ஆத்மிக்கு பெரிய சவால். பா.ஜ., முழுமையான ஆதிக்கத்தை விரும்புகிறது. இன்றைய வெற்றி அவர்களின் போராட்டத்தை வலுப்பெற்றுள்ளது. அரசியலமைப்பை பாதுகாக்கும் பிரசாரத்தில் உள்ள தலைவர்களுக்கு இனி சவாலாக தான் இருக்கும்'' எனத் தெரிவித்து உள்ளார்.

Advertisement