அமெரிக்க விமானம் பனிப்பாறையில் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் பலி
அலாஸ்கா :மாயமானதாக கூறப்பட்ட அமெரிக்க பயணியர் விமானம், கடலில் பனிப்பாறையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் உனலக்லீட்டில் இருந்து, நோம் நகருக்கு 'செஸ்னா 208 பி -கிராண்ட் காராவன்' என்ற சிறிய ரக பயணியர் விமானம் புறப்பட்டது. பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இதில், விமானி உட்பட 10 பேர் பயணித்தனர்.
கடந்த 6ம் தேதி மதியம் 2:37 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம், அடுத்த 39 நிமிடங்களிலேயே ரேடாருடனான தொடர்பை இழந்தது. இதைத் தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
விமானம் மாயமானதாகக் கூறப்படும் வெள்ளை மலை பகுதியில், தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. மோசமான வானிலை மற்றும் இரவு நேரம் காரணமாக விமானத்தை தேடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வாயிலாக கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இறுதியில், நோம் நகரில் இருந்து தென்கிழக்கே 55 கி.மீ., தொலைவில் கடல்பகுதியில் பனிப்பாறையில், விமானம் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடலின் மேற்பரப்பில் இருந்த அடர்ந்த பனி காரணமாக, விபத்து நடந்த இடத்தை அடைவதில் பாதுகாப்பு படையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. பலமணி நேர போராட்டத்துக்கு பின், விமானம் விழுந்த பகுதியை அவர்கள் அடைந்தனர்.
அங்கு, விமானம் நொறுங்கிக் கிடந்ததும், அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்ததும் தெரியவந்தது. பலியானவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாகவே, விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், விசாரணைக்கு பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என, அலாஸ்கா போலீசார் தெரிவித்தனர். அலாஸ்காவை சுற்றியுள்ள பகுதிகளை இணைக்க, போதுமான சாலை வசதிகள் இல்லாததால், பெரும்பாலானோர் தங்கள் அன்றாடப் பணிகளுக்கு, சிறிய ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில், அமெரிக்காவில் நடந்த மூன்றாவது விமான விபத்து இது.