மாநகராட்சி ரோடுகள் சீரமைப்பு எப்போது?

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு ரோடுகள் பெருமளவு சேதமடைந்து காணப்படுகிறது. குழாய் பதிப்பு பணிக்கு தோண்டிய குழிகளால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கும் அவதிக்கும் ஆளாகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளுடன் 160 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. மாநகராட்சி பகுதியில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் நகர எல்லையில் 55 கி.மீ., நீளத்தில் கடந்து செல்கின்றன. பிரதான ரோடுகள், நகர சுற்றுச் சாலைகள் ஆகியன இதில் இடம் பெற்றுள்ளன.

இது தவிர ஏறத்தாழ 950 கி.மீ., நீளத்தில் தார் ரோடு; 200 கி.மீ., நீளத்தில் கான்கிரீட் ரோடுகள் உள்ளன. வாகனப் போக்குவரத்து உள்ள 70 கி.மீ., மற்றும் வாகனப் போக்குவரத்து இல்லாத 100 கி.மீ., நீளத்தில் மெட்டல் ரோடு அமைந்துள்ளது. மாநகராட்சி எல்லையில் ஏறத்தாழ 1400 கி.மீ., நீளத்தில் ரோடுகள் பயன்பாட்டில் உள்ளன.

திருப்பூர் நகரப் பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து காரணமாக நகரின் பெரும்பாலான ரோடுகள் எந்நேரமும் பரபரப்பான மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்துடன் காணப்படுகிறது.

நெரிசலுக்கு காரணம்



போக்குவரத்து நெரிசலுக்கு பல்வேறு பகுதிகளில் ரோடுகள் நிலை மோசமாக இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக ரோடுகளில் பல இடங்களில் சேதப்படுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.

குழாய் பதிப்பு பணிக்கும் பராமரிப்பு பணிக்கும் ஏராளமான இடங்களில் ரோடுகள் சேதப்படுத்தப்படுகிறது.உரிய திட்டமிடல் இல்லாத காரணத்தால், புதிதாக ரோடு போட்ட சில நாட்களில் குழி தோண்டி குழாய் பதிப்பது போன்ற பணிகள் நடக்கிறது.

இதனால், புதிய ரோடுகளை முழுமையாகப் பயன்படுத்தக் கூட முடியாமல் அவை சேதப்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.இது தவிர வளர்ச்சித் திட்டப் பணிகளின் போது, ரோடுகளில் குழாய் பதிக்க குழி தோண்டிய பின் அதை முறையாக சீரமைப்பு செய்வது குறித்து பணி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாமல் பணிகள் முழுமை பெறாமல் விடுபட்டு விடுவதும் சகஜமாக உள்ளது.

இதனால், குழாய் பதித்த பின்னர் அதை மூடாமல் விட்டுச் செல்வது பல பகுதிகளில் காணப்படுகிறது.இது போன்ற சேதமான ரோடுகள் காரணமாக நகரப் பகுதி ரோடுகளில் வாகனங்கள் சென்று வருவதே பெரும் சவாலாக உள்ளது. வளர்ச்சிப்பணிகளின் போது, இது போன்ற ரோடு சேதங்களும் சீரமைக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில் மாநில நிதிக்குழு திட்டத்தில் 35 கி.மீ., ரோடு; 'டுரிப்' திட்டத்தில் 93 கி.மீ., ரோடு; நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் 25 கி.மீ., மற்றும் 41 கி.மீ., நீளம்; 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 35 கி.மீ., சிறப்பு நிதியில் 30 கி.மீ., என பல திட்டங்களில் 402 கி.மீ., ரோடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

திட்டப் பணிகளால் சேதமாகும் ரோடுகள் சீரமைப்பு என ஒப்பந்தத்தில் குறிப்பிடாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு நிதி பெற்று பழுதான ரோடுகள் சீரமைப்பு செய்யப்படுகிறது. தற்போது டெண்டர் கோரப்படும் பணிகளில் இதை இணைத்து மட்டுமே திட்ட மதிப்பீடு செய்து பணி உத்தரவு வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. வரும் நிதியாண்டில் மாநகராட்சி பகுதியில் மீதமுள்ள ரோடு பணிகளை முழுமையாக செய்து முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 63 கி.மீ., நீளத்தில் உள்ள மெட்டல் ரோடுகள் தார் ரோடாக மாற்றப்படும்.

ஆறு கி.மீ., மெட்டல் ரோடு கான்கிரீட் ரோடாகவும், குழாய் பதிப்பு காரணமாக சேதமான 15 கி.மீ., ரோடு; குழாய் இணைப்பு பணிக்கு சேதமான 24 கி.மீ., ரோடு, உள்ளிட்ட வகையில் மொத்தம் 312 கி.மீ., ரோடுகள் சீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. இவற்றுக்கு 206 கோடி ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.பல்வேறு ஆய்வுகள் மற்றும் கோரிக்கை அடிப்படையில் இந்த விவரங்கள் பெறப்பட்டு விரிவான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்து நிதி ஒதுக்கீடு பெறப்படும்.இப்பணிகள் நிறைவு பெறும் நிலையில், மாநகராட்சி பகுதியில் ரோடு பிரச்னைக்கு முற்றிலும் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement