நியூசிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: முத்தரப்பு லீக் போட்டியில்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850082.jpg?width=1000&height=625)
லாகூர்: முத்தரப்பு லீக் போட்டியில் ஏமாற்றிய பாகிஸ்தான் அணி 78 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.
பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. லாகூரில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு வில் யங் (4) ஏமாற்றினார். ரச்சின் ரவிந்திரா (25) நிலைக்கவில்லை. பின் இணைந்த கேன் வில்லியம்சன் (58), டேரில் மிட்செல் (81) அரைசதம் கடந்தனர். அபாரமாக ஆடிய பிலிப்ஸ் (106*) சதம் விளாசினார். நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 330 ரன் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் ஷா அப்ரிதி 3 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம் (10), கம்ரான் குலாம் (18), கேப்டன் முகமது ரிஸ்வான் (3) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய பகார் ஜமான் (84) நம்பிக்கை தந்தார். சல்மான் ஆகா (40), தையப் தாஹிர் (30) ஆறுதல் தந்தனர். பாகிஸ்தான் அணி 47.5 ஓவரில் 252 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி, சான்ட்னர் தலா 3, பிரேஸ்வெல் 2 விக்கெட் சாய்த்தனர்.