ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை வெற்றி
கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி 3-0 என, ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், சென்னை அணிகள் மோதின. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் நிஷு குமார் 'சேம்சைடு' கோல் அடித்தார். பின், 21வது நிமிடத்தில் சென்னை அணியின் வில்மர் ஜோர்டான் கில் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் சென்னை அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+7வது) சென்னை அணிக்கு டேனியல் சிமா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய ஈஸ்ட் பெங்கால் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை அணி 20 போட்டியில், 5 வெற்றி, 6 'டிரா', 9 தோல்வி என 21 புள்ளிகளுடன் 10வது இடத்துக்கு முன்னேறியது. ஈஸ்ட் பெங்கால் அணி (18 புள்ளி, 5 வெற்றி, 3 'டிரா', 11 தோல்வி) 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது.