தங்கம் வென்றார் தமிழகத்தின் பவித்ரா: 'போல் வால்ட்' போட்டியில் கலக்கல்

டேராடூன்: தேசிய விளையாட்டு 'போல் வால்ட்' போட்டியில், தமிழக வீராங்கனை பவித்ரா தங்கம் வென்றார்.

உத்தரகாண்ட்டில், தேசிய விளையாட்டு 38வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் தமிழகத்தின் பவித்ரா வெங்கடேஷ், அதிகபட்சமாக 3.95 மீ., தாண்டி தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை பரானிகா இளங்கோவன் (3.90 மீ.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். கேரளாவின் மரியா ஜெய்சனுக்கு (3.90 மீ.,) வெண்கலம் கிடைத்தது.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் தமிழகத்தின் ஸ்ரீராம் விஜயகுமார், அதிகபட்சமாக 7.70 மீ., தாண்டி வெள்ளி வென்றார். உ.பி.,யின் ஷாநவாஸ் கான் (7.70 மீ.,), கேரளாவின் அனுராக் (7.70 மீ.,) முறையே தங்கம், வெண்கலம் கைப்பற்றினர்.


பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில், இலக்கை 11.88 வினாடியில் அடைந்த தமிழகத்தின் கிரிதரணி வெண்கலம் கைப்பற்றினார். முதலிரண்டு இடத்தை மகாராஷ்டிராவின் சுதேஷனா (11.76 வினாடி), தெலுங்கானாவின் நித்யா (11.79 வினாடி) பிடித்தனர்.

ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் ஒடிசாவின் அனிமேஷ் (10.28 வினாடி) தங்கம் வென்றார்.

வட்டு எறிதல்: பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் ஹரியானாவின் சீமா, அதிகபட்சமாக 52.70 மீ., எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை டில்லியின் பாவனா யாதவ் (52.70 மீ.,), பஞ்சாப்பின் அமானத் கம்போஜ் (52.70) வென்றனர்.

ஆண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் சர்வீசஸ் அணியின் ககன்தீப் சிங் அதிகபட்சமாக 55.01 மீ., எறிந்து தங்கத்தை கைப்பற்றினார். ஹரியானாவின் நிர்பய் சிங் (54.07 மீ.,), கேரளாவின் அலெக்ஸ் தங்கச்சன் (52.79 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.


10,000 மீ., ஓட்டம்: பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை 33 நிமிடம், 33.47 வினாடியில் கடந்த மகாராஷ்டிராவின் சஞ்சிவானி யாதவ் தங்கம் வென்றார். உத்தரகாண்ட்டின் அன்கிதா (34 நிமிடம், 31.03 வினாடி), சோனியா (35 வினாடி, 45.19 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலத்தை கைப்பற்றினர்.

ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தின் பைனலில் இமாச்சல பிரதேசத்தின் சவான் பார்வல் (28 நிமிடம், 49.93 வினாடி) தங்கம் வென்றார். மகாராஷ்டிராவின் கிரண் (29 நிமிடம், 04.76 வினாடி), மத்திய பிரதேசத்தின் வினோத் சிங் (29 நிமிடம், 43.60 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.

1500 மீ., ஓட்டம்:பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் டில்லியின் சந்தா (4 நிமிடம், 17.74 வினாடி) தங்கம் வென்றார். மத்திய பிரதேசத்தின் தீக் ஷா (4 நிமிடம், 21.92 வினாடி), பஞ்சாப்பின் அமன்தீப் கவுர் (4 நிமிடம், 22.75 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலத்தை கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் சர்வீசஸ் அணியின் யூனஸ் ஷா (3 நிமிடம், 46.48 வினாடி), மத்திய பிரதேசத்தின் ரித்தேஷ் (3 நிமிடம், 46.64 வினாடி), உத்தரகாண்ட்டின் ராம் சிங் (3 நிமிடம், 50.24 வினாடி) முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

Advertisement