காங்கிரஸ் வேட்பாளர்களால் கை நழுவிய 13 தொகுதிகள்!


புதுடில்லி: டில்லி தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், 13 தொகுதிகளில், வெற்றி வித்தியாசத்தை காட்டிலும், அதிக ஓட்டுகளை பெற்றுள்ளனர்.


டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவியது. இதில் பா.ஜ., 48 தொகுதியும், ஆம் ஆத்மி 22 தொகுதியும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.


மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 13 தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்களின் ஓட்டு வித்தியாசத்தை விட, காங்கிரஸ் வேட்பாளர்கள் கூடுதல் ஓட்டு பெற்றுள்ளனர்.
திமார்பூர், நான்குளோய் ஜாட், மதிப்பூர், ரஜிந்தர் நகர், புதுடில்லி, ஜங்புரா, கஸ்துாரிபா நகர், மாள்வியா நகர், சித்ரார்பூர், சங்கம் விகார், கிரேட்டர் கைலாஷ், திரிலோக்புரி, பத்லி ஆகியவையே அந்த 13 தொகுதிகள்.


இவற்றில், கஸ்துாரிபா நகர் தொகுதியில் மட்டும் காங்கிஸ் வேட்பாளர், 27,019 ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் மூன்றாமிடம் பெற்றுள்ளது. இதன் மூலம், ஆம் ஆத்மி தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அமைந்து விட்டனர்.

Advertisement