தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி திடீர் அடைப்பு

பல்லடம்: கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்கிறது. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், தினசரி பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.

பண்டிகை, முகூர்த்த நாட்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் வருகையின் போது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்கின்றனர்.

இதற்காக, முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து, மாற்றுப்பாதையில் போக்குவரத்தை அனுமதிப்பது வழக்கம். நேற்று திடீரென, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.

பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் அனைத்தும், செட்டிபாளையம் ரோடு வழியாக அனுமதிக்கப்பட்டன. பொதுமக்கள் குழம்பினர்.

தேசிய நெடுஞ்சாலை சார்பில், ரோடு போடும் பணி மேற்கொள்ளப்பட்டது நீண்ட நேரத்துக்குப் பின்பே தெரியவந்தது. இந்த திடீர் போக்குவரத்து மாற்றத்தால், பல்லடத்தில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

Advertisement