இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ராகுல் மீது வழக்கு

2

புவனேஸ்வர் :லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், டில்லியில் கடந்த மாதம் காங்., புதிய தலைமை அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது பேசிய ராகுல், ''பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களையும் தன்வசப்படுத்துகிறது. இதனால், நாங்கள் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்,'' என்றார்.

இந்நிலையில், ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்ட கலெக்டரிடம், ராகுலுக்கு எதிராக பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் மனு அளித்தனர். அதில், 'ராகுல் தேச விரோத கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன. அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுலுக்கு எதிராக ஜர்சுகுடா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement