எம்.பி.,க்களை இழுக்க முயற்சி உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850396.jpg?width=1000&height=625)
மும்பை :மஹாராஷ்டிராவில் நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், 'மஹாயுதி கூட்டணி' வென்று முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த அணியில், 57 இடங்களை வென்ற சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக இருக்கிறார்.
சவால்
காங்கிரசின் 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களில் வென்றது. தேர்தலுக்கு பின், உத்தவ் சிவசேனா முன்னாள் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர், ஷிண்டே சிவசேனாவுக்கு தாவி வருகின்றனர்.
உச்சபட்சமாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் எம்.பி.,க்கள் கூண்டோடு ஷிண்டே பக்கம் தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது பற்றி ஷிண்டே கூறுகையில், ''துணை முதல்வராக இருக்கும் என்னுடன் பலர் தொடர்பில் இருக்கின்றனர். நான் செயலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன்,'' என்றார். இதனால், ஆவேசம் அடைந்த உத்தவ் தாக்கரே, ''எங்கள் எம்.பி.,க்களை வேட்டையாட ஷிண்டே முயற்சி செய்கிறார்.
''போலீஸ், அரசு இயந்திரம், மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் உதவி இல்லாமல் ஒரு எம்.பி.,யையாவது உங்களால் இழுக்க முடியுமா?'' என சவால் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே தரப்பு எம்.பி.,க்கள் எட்டு பேர், உத்தவ் தரப்பு சிவசேனாவிலேயே உறுதியுடன் தொடருவதாக தெரிவித்துள்ளனர்.
கூட்டணியின் பலம்
உத்தவ் தாக்கரேவுக்கு லோக்சபாவில் ஒன்பது எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் இரண்டு எம்.பி.,க்களும் உள்ளனர். எம்.பி.,க்கள் அணி மாறினால், லோக்சபாவில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் பலம் அதிகரிக்கும்.
![J.V. Iyer J.V. Iyer](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)