நகராட்சி கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா வைத்த விவகாரம்: நகர தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

20


சென்னை: கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா வைத்து கண்காணித்த விவகாரத்தில், தி.மு.க., நகர செயலாளர் நவாப்பை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில், தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த ஜன., 25ல் நடந்தது.இதில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை மட்டும் சுத்தம் செய்ததாகக் கூறி தி.மு.க.,வினர் புகார் எழுப்பினர்.
நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறையில், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை, நகராட்சி தலைவர் பரிதா நவாப்பின் கணவரும், நகர தி.மு.க., செயலருமான நவாப் திட்டினார்.
பதிலுக்கு ராமகிருஷ்ணனும் அவரை திட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள், கடந்த 6ம் தேதி பரவியது.

இச்சூழ்நிலையில், நகராட்சி ஊழியர்கள், கமிஷனர் அறைக்குள் கடந்த 29ல் நுழையும் போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில், 'பீப்' சத்தம் கேட்டது.
இதையடுத்து, ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோது உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிந்தது.
நகராட்சி கமிஷனரின் செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் இந்த கேமரா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தி.மு.க.,கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், நவாப்பை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

Advertisement