சிபில் ஸ்கோரால் கடைசி நேரத்தில் நின்ற திருமணம்: மஹா.,வில் மணமகன் அதிர்ச்சி
மும்பை: மஹாராஷ்டிராவில் மணமகனுக்கு சிபில் ஸ்கோர் போதுமளவிற்கு இல்லாத காரணத்தினால், பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய நிகழ்வு அரங்கேறி உள்ளது.
ஜாதகம் பார்த்து, குடும்ப பின்னணியை தெரிந்து கொண்டு திருமணம் நடப்பது நம் நாட்டில் வழக்கம். இதில் ஏதாவது ஒன்று சரியில்லாவிட்டாலும் அல்லது குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்படும் பட்சத்தில் மட்டுமே திருமணம் தடைபடும்.
ஆனால், இதற்கு நேர்மாறான நிகழ்வு ஒன்று மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. அம்மாநிலத்தின் முர்திசாப்பூரில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அனைவரும் சம்மதித்துடன் இந்த திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மணமகளின் நெருங்கிய உறவினர் ஒருவர் மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார்.
அதில், மணமகன் பல கடன் வாங்கி உள்ளதும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதும் தெரியவந்தது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள நபருக்கு ஏன் தங்கள் குடும்ப பெண்ணை திருமணம் செய்து தர வேண்டும். அவரால் எப்படி, மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்? என உறவினர் கேள்வி எழுப்பினார். இதனை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தங்கள் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, குடும்பத்தினர் உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.
கடைசி நேரத்தில் சிபில் ஸ்கோரால் திருமணம் நின்ற நிகழ்வு மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.