நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்வித்த மத்திய பட்ஜெட்!

13

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக, மத்திய பட்ஜெட்டை கடந்த வாரம் பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அதில், முக்கிய அம்சமாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, 7 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப் பட்டது.


அதாவது, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் மற்றும் 75,000 ரூபாய் நிலையான வரிக்கழிவும் சேர்த்தால், 12.75 லட்சம் ரூபாய் வரை இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. மாதச்சம்பளம் தவிர வேறு வருமானம் ஏதுமில்லாத நடுத்தர வர்க்கத்தினர், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அத்துடன், வரி விகிதம் மாற்றத்தால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பானது, பொதுமக்களின் நுகர்வு அதிகரிப்பாலும், அதன் வாயிலாக கிடைக்கும் வரி வருவாயாலும் சரிக்கட்டப்படும் என நம்பப்படுகிறது. மேலும், மூத்த குடிமக்கள் பெறும் வட்டி வருவாய்க்கான வரிக்கழிவு அளவும் உயர்த்தப்பட்டுள்ளது, ஓய்வு காலத்தில் நிலையான ஒரு வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளோருக்கு ஆறுதல் தருவதாக உள்ளது.


வருமான வரி விலக்கு வரம்பு உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைவர் என்று தோன்றினாலும், தொழிலாளர் சேமநல நிதி, பொது சேமநல நிதி, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் தொடர்பானவற்றில், இதுவரை தரப்பட்ட வரிச் சலுகையால், அவர்களுக்கு கிடைத்த கணிசமான சேமிப்பு இனி குறையலாம்.


குறிப்பாக, நீண்ட கால சேமிப்பு திட்டங்களில், குறிப்பிடத்தக்க அளவுக்கு சரிவு ஏற்படலாம். பொது சேமநல நிதி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதும் குறையலாம். அது, அவர்களின் நிதி பாதுகாப்பை வருங்காலத்தில் பலவீனப்படுத்தலாம்.


அதுமட்டுமின்றி, விரைவில் அமைக்கப்பட உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் போது, பல லட்சம் பேரின் சம்பளம் கணிசமாக உயர்ந்து, அவர்கள் மீண்டும் வரி விதிப்பு வரம்பிற்குள் வரும் சூழ்நிலையும் உருவாகும். அப்போது, வரும் நிதியாண்டில் அவர்கள் பெற உள்ள சலுகை, எதிர்காலத்தில் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.


தொடர்ந்து, 10 ஆண்டுகளாக மத்தியில் தனித்து ஆட்சியில் இருந்த பா.ஜ., 2024 தேர்தலுக்கு பின், மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிப்பதாலும், அந்தக் கூட்டணியில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சியாக இடம் பெற்றிருப்பதாலும், பீஹார் மாநிலம் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளதாலும், அந்த மாநிலத்திற்கு பட்ஜெட்டில் அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய பட்ஜெட்டால் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளன. குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அதிருப்தி தெரிவித்துள்ளார். 'மத்திய பட்ஜெட்டில், தமிழகம் என்ற வார்த்தை கூட இடம் பெறவில்லை' என, அவர் வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பாரபட்சமான அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். மேலும், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளால், நடுத்தர வர்க்கத்தினர் தற்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனாலும், வரி தள்ளுபடிகளை விட, நிலையான வருமான வளர்ச்சி, பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, வரி விதிப்பு அளவீடுகளை விரிவுபடுத்துவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அவசியம்.


அத்துடன், ஓய்வு பெற்றவர்களுக்கான சமூக பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம். ஏனெனில், தனியார் துறையில் பணியாற்றுவோர் பலருக்கு சமூக பாதுகாப்பு திட்டம் இல்லை. வருங்காலங்களில், மத்திய அரசு இவற்றில் கவனம் செலுத்தும் என, நம்புவோம். இல்லையெனில், வரி விலக்கு வரம்பு உயர்வானது, தற்காலிக நிவாரணமாகவே அமையும்.

Advertisement