'மாணவர்கள் தினமும் நாளிதழ் படிக்க வேண்டும்'

கோவை : மாநகர போலீஸ் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, 'கோவை மாநகர போலீசாருடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி, நடத்தப்பட்டது.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், போலீசாரின் அன்றாட பணிகள், போலீஸ் ஸ்டேஷன்கள், சிக்னல் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இந்தநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் போலீஸ் பயிற்சி பள்ளிக்கும், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அழைத்து செல்லப்பட்டனர்.

இதைதொடர்ந்து, 'காபி வித் கமிஷனர்' என்ற பெயரில், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் கமிஷனர் சரவண சுந்தர் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவர் பேசுகையில், ''மாணவர்கள் அந்தந்த வயதில், அனுபவிக்க வேண்டிய விஷயங்களை அனுபவிக்க வேண்டும். கல்லுாரி நாட்களை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். பாட புத்தகங்களில் இருப்பதை மட்டும் படிக்காமல், உலகில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு மாணவரும் சுய ஒழுக்கத்துடன் வளர வேண்டும்,'' என்றார்.

Advertisement