தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சுவாமி சண்முகப்பெருமான் கடலில் கண்டெடுக்கப்பட்ட 370ம் ஆண்டையொட்டி சுவாமி அலைவாயுகந்தபெருமான் (முருகப்பெருமான்) தங்க சப்பரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் மூலவராக சுப்பிரமணியரும், உற்சவமூர்த்திகளாக சுவாமி சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்க பெருமான், அலைவாயுகந்த பெருமான் ஆகியோர்களும் அருள் பாலிக்கின்றனர்.
கடந்த 369 ஆண்டுகளுக்கு முன் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தில் இப்பகுதி சமயத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வந்த டச்சுக்காரர்கள் கோயிலில் இருந்த சுவாமி சண்முகர் மற்றும் நடராஜர் ஐம்பொன் விக்கிரகங்களை தூக்கி தங்களது நாட்டிற்கு கடத்தி கொண்டு சென்றனர்.
கடல் வழியே படகில் சுவாமி சண்முகரை கொண்டு சென்ற போது பலத்த புயல் வீசி அவர்களை நிலை குலைய வைத்தது. கடும் புயலினால் அச்சமடைந்த டச்சுக்காரர்கள் இப்புயலுக்கு காரணம் தாம் கொண்டு செல்லும் சண்முகரின் விக்கிரகம் தான் என அச்சமடைந்து சுவாமி சண்முகர், நடராஜர் விக்கிரகங்களை கடலில் வீசினர்.
அதன் பின்பு புயல் நின்றது. அவர்கள் தப்பி பிழைத்து தங்கள் நாடு சென்றனர். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து சுவாமி சண்முகர், முருகபக்தரான வடமலையப்பர் என்பவரின் கனவில் தோன்றி தான் கடலில் இருப்பதையும், தான் இருக்கும் இடத்தில் கடலின் நடுவில் எலுமிச்சை பழம் மிதக்கும் என்றும் கூறியுள்ளார். அதன் படி அந்த முருகபக்தர் வடமலையப்பர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆலந்தலை மற்றும் காயாமொழி பகுதியை சேர்ந்தவர்களுடன் கடலுக்குள் படகில் சென்றுள்ளார்.
கடலின் உள்ளே, முருகர் கனவில் கூறியது போல் ஒரு இடத்தில் எலுமிச்சை மிதந்துள்ளது. உடனே அவர்கள் கடலில் குதித்து முழ்கி பார்த்த போது அங்கு சுவாமி சண்முகர், நடராஜர் விக்கிரகங்கள் இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டு, விக்கிரகங்களை மீட்டு கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் நடந்து, சுவாமி சண்முகர் கண்டு பிடிக்கப்பட்டு இன்றுடன் 370 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக, இன்று பிப்., 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 10 மணியளவில் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடந்தது.
மாலை சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் திரு வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.