புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்

கோல்கட்டா: சுந்தரவன புலிகள் காப்பகத்தில் புலியிடம் சிக்கிய வன ஊழியர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சுந்தரவன புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு இன்று காலை ஒரு புலி தாக்கியதில் வனத்துறை ஊழியர் காயமடைந்தார். இந்த சம்பவம் வனப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.

புலிகள் காப்பகத்திற்கு வெளியே சுற்றித் திரிந்த புலி, அஜ்மல்மாரி வனப்பகுதிக்கு சென்று விட்டது. அதை ஊருக்குள் வராமல் தடுக்கும் நோக்கத்தில் வனத்துறை ஊழியர்கள் துரத்தினர். அப்போது வனத்துரை ஊழியர் ஒருவரை புலி தாக்கியது.
இந்த சம்பவம் குறித்து பிரதேச வன அதிகாரி நிஷா கோஸ்வாமி கூறியதாவது:

கேமராவில் பதிவான அந்த வீடியோவில், எட்டு முதல் பத்து வனத்துறை ஊழியர்கள், காப்பகத்திலிருந்து வெளியேறிய புலியை மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்ப முயற்சித்தனர்.

அப்போது திடீரென்று, அந்த புலி, வன ஊழியர்களை நோக்கி திரும்பியது.

வன ஊழியர் ஒருவரின் மீது பாய்ந்து கடித்துக் குதறியது. சக ஊழியர்கள் பலர் குச்சிகளால் குத்தி புலியின் நகங்களிலிருந்து விடுவிக்க முயற்சிப்பது தெரிகிறது. அவர்களுடைய முயற்சியின் காரணமாக, ஒருவழியாக, புலி அந்த ஊழியரை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடியது.

காயமடைந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement