அதிவேக ரயில் கேரளாவுக்கு தேவையில்லை: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரை

14

திருவனந்தபுரம்: நகர்ப்புற பகுதிகள் மிகுந்த கேரளா மாநிலத்தில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் போக்குவரத்து வசதி தேவையில்லை என்று மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரைத்துள்ளார்.டில்லி மெட்ரோ திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். கேரளாவைச் சேர்ந்தவர்.

கேரளா முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள பரிந்துரை விபரம்:
தொடர்ச்சியான நகர்ப்புற குடியிருப்புகளை கொண்டுள்ள கேரளாவுக்கு, மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில்கள் தேவையில்லை.

மாநிலத்தின் புவியியல் அமைப்புக்குத் தகுந்தபடி மணிக்கு அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில்களை போதுமானவை.

சராசரியாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் கூட, திருவனந்தபுரத்திலிருந்து கண்ணனூர் வரையிலான 430 கிலோமீட்டர் தூரத்தை, 3.15 மணி நேரத்தில் கடந்து விட முடியும்.
இவ்வாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.இத்தகைய செமி ஹைஸ்பீடு ரயில் திட்டத்தை கேரளாவில் நிறைவேற்ற ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும்.


இதில் 51% இந்திய ரயில்வே துறையும், 49 சதவீதம் கேரளா அரசும் பங்கு வைத்திருக்கும். மொத்த செலவில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படும். 40,000 கோடி ரூபாய் கடன் மூலமாக திரட்டப்படும்.


இந்த ரயில் திட்டத்தை எதிர்காலத்தில் சென்னை- பெங்களூரு - கோவை அதிவேக ரயில் வழித்தடத்துடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீதரன் கூறுகையில், ''அதிவேக ரயில் போக்குவரத்து என்பது, குறைந்தபட்ச நிறுத்தங்கள் உள்ள வழித்தடம் மட்டுமே சாத்தியமாகும்.


கேரளா போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த மாநிலங்களில், 25 முதல் 30 கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு நிறுத்தம் தேவைப்படும். கொங்கன் ரயில்வே வழித்தடம் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. ஆனால் அந்த வேகத்தில் ரயில்களை இயக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை,'' என்றார்.

Advertisement