இந்திய இன பசு ரூ.40 கோடிக்கு விற்பனை; கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு!
ரியோ: இந்தியாவின் நெலார் இனத்தை சேர்ந்த பசு மாடு, பிரேசில் நாட்டில் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கால்நடை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
வெவ்வேறு விதமான சாதனைகளை கின்னஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரிக்கிறது. அந்த வகையில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கால்நடை என்ற பெருமையை பிரேசில் நாட்டில் விற்கப்பட்ட பசுவுக்கு வழங்கியுள்ளது கின்னஸ் அமைப்பு.
'வையாடினா 19' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பசுவின் வயது 53 மாதங்கள் மட்டுமே. இது, இந்தியாவில் ஓங்கோல் பகுதியை பூர்விகமாக கொண்ட நெலார் இனத்தை சேர்ந்த பசுவாகும். இதன் எடை 1101 கிலோ.
இது, பிரேசில் நாட்டின் மினாஸ் கெரைஸ் நகரில் ஏலத்தில் விடப்பட்டபோது, 40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்த பசு, அழகு ராணியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்காக நடத்தப்பட்ட அழகுப்போட்டியில், 'மிஸ் சவுத் அமெரிக்கா' என்ற பட்டத்தையும் இந்த பசு மாடு பெற்றுள்ளது.
எப்படி வந்தது பிரேசிலுக்கு
இந்தியாவின் ஓங்கோல் பகுதியில் மட்டுமே இருந்த நெலார் இன பசு மாடுகள், 1868ம் ஆண்டு கப்பல் மூலம் பிரேசில் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாக, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.