சாகும் வரை சிறை தண்டனை;பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பு

10

புதுடில்லி: குஜராத்தில் நடந்த பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து ஆமதாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது.
நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த, 46 வயது தவல் திரிவேதி என்பவர் போக்சோ, கற்பழிப்பு வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்.
சிறையில் இருந்து பரோலில் வந்தவர், ஆங்கிலப்பயிற்சி வகுப்பு நடத்தினார். அப்போது பயிற்சிக்கு வந்த மாணவியரிடம் தனக்கு ஜோதிடம் தெரியும் என்று கூறி ஏமாற்றினார்.

தன்னிடம் பயிற்சிக்கு வந்த 18 வயது பெண்ணை ஏமாற்றி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவர், தான் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்பதை மறைத்தும், வேறு பெயர், வேறு அடையாளத்துடன் அந்த பெண்ணை ஏமாற்றியதும் பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
முதலில் மாநில போலீஸ் விசாரித்த இந்த வழக்கு, பிறகு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பலாத்காரம், கடத்தல், ஆள் மாறாட்டம் என மூன்று பிரிவுகளில் பதிவான இந்த வழக்கை விசாரித்த ஆமதாபாத் சிறப்பு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபர், சாகும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும், 3 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

Advertisement