ஒரே நாளில் இரு அணிக்கு பேட்டிங் * சிக்கலில் இலங்கை அணி வீரர்

கொழும்பு: ஒரே நாளில் கொழும்பு, துபாய் என இரு நாடுகளில் இரு வேறு அணிகளுக்கு விளையாடிய ஷனகா, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இலங்கையில் மேஜர் லீக் முதல் தர தொடர் (3 நாள்) நடக்கிறது. மூர்ஸ், சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் அணி மோதிய போட்டி கொழும்புவில் கடந்த ஜன. 31-பிப். 2ல் நடந்தது. சிங்கள அணிக்காக இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஷனகா விளையாடினார். இதன் மூன்றாவது, கடைசி நாளான பிப். 2ல் ஷனகா, 123 ரன் எடுக்க, சிங்கள அணி 275 ரன் எடுத்தது. பின் மூர்ஸ் அணி பேட்டிங் செய்த போது, ஷனகா களமிறங்கவில்லை.
ஷனகாவுக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதாக, அம்பயர் வெண்டல் ரெப்ரூயை நம்ப வைத்துள்ளனர். இவருக்குப் பதில் மாற்று வீரர் களமிறங்க, மூன்றாவது நாள் ஆட்டத்தின் பாதியில் துபாய் பறந்தார் ஷனகா. அன்று இரவு (பிப். 2), சர்வதேச லீக் 'டி-20' தொடரில் துபாய் அணிக்காக பங்கேற்றார். 34 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார்.
ஒரே நாளில் இரு வேறு அணிகளுக்காக, இரு வேறு நாட்டில் ஷனகா விளையாடியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு விசாரிக்கிறது.
ஷனகா கூறுகையில்,'' முதல் தர போட்டியில் விளையாடுமாறு இலங்கை கிரிக்கெட் போர்டு கேட்டுக் கொண்டதால், கொழும்பு வந்தேன். துபாயில் இருந்து எனது அணி அழைத்ததால், அங்கு செல்ல நேரிட்டது. இது இரு அணி நிர்வாகத்துக்கும் தெரியும்,'' என்றார்.

Advertisement