'ஏ.டி.எம்.,களில் 24 மணி நேரமும் பாதுகாவலர் தேவையில்லை'

1

புதுடில்லி: 'ஏ.டி.எம்., மையங்களில், 24 மணி நேரமும் பாதுகாவலரின் கண்காணிப்பு தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012 டிசம்பரில் வட கிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள பிரபல வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளரை ஏமாற்றி, 35,000 ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்தார்.

இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குவஹாத்தி உயர் நீதிமன்றம், 'ஏ.டி.எம்., மையங்களில் ஒரு நேரத்தில், ஒரு வாடிக்கையாளர் மட்டும் உள்ளே செல்வதை உறுதி செய்யும் வகையில், அனைத்து ஏ.டி.எம்., மையங்களிலும் 24 மணி நேரமும் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வினோத் சந்திரன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து வங்கிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அசாமில் மட்டும் 4,000 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

“ஆகையால், எல்லா ஏ.டி.எம்., மையங்களிலும் பாதுகாவலர்களை நியமிப்பது அவசியமில்லை. அதேசமயம், ஏ.டி.எம்.,களின் முறையான செயல்பாட்டிற்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ள அனைத்து வங்கிகளும் தயாராக உள்ளன,” என, வாதிட்டார்.

இதையடுத்து, 'அனைத்து ஏ.டி.எம்.,களிலும், 24 மணி நேரமும் பாதுகாவலர் கண்காணிப்பு அவசியம்' என்ற உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement