மெஹுல் சோக்சிக்கு புற்றுநோய் பெல்ஜியம் நாட்டில் சிகிச்சை

மும்பை :வங்கி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாடு தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பெல்ஜியம் நாட்டில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி உள்ளிட்டோர், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பினர்.

இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குக்கள் நிலுவையில் உள்ள நிலையில், நீரவின் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்து வருகிறது.

இதற்கிடையே, மெஹுல் சோக்சியை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மும்பையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், மெஹுல் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால், அவரது சார்பில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

அப்போது அவர் கூறுகையில், “மெஹுல் சோக்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, ஐரோப்பிய நாடான பெல்ஜியமில் சிகிச்சை பெற்று வருகிறார். மெஹுலின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புகிறேன்,” என, தெரிவித்தார்.

தப்பியோடிய மெஹுல் சோக்சி, தீவு நாடான ஆன்டிக்வா மற்றும் பார்பராவில் வசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அவர் பெல்ஜியத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவது இதன் வாயிலாக உறுதியாகி உள்ளது.

Advertisement