கேரளாவில் ராகிங் கொடூரம்: நர்சிங் கல்லுாரி மாணவர்கள் 5 பேர் கைது

கோட்டயம்: கோட்டயத்தில் உள்ள நர்சிங் கல்லுாரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த 5 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவின் கோட்டயத்தில் நர்சிங் கல்லூரி உள்ளது. இங்குள்ள மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஐந்து பேர், தங்கள் ஜூனியர்களை கொடூரமாக ராகிங் செய்து வந்துள்ளனர்.

தொடர்ச்சியான இந்த வன்முறை செயல்களை, தாங்க முடியாத அந்த ஜூனியர் மாணவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில்,சாமுவேல் ஜான்சன், என்.எஸ். ஜீவா, கே.பி. ராகுல் ராஜ், சி. ரிஜில் ஜித் மற்றும் விவேக் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:இந்தக் குழு நவம்பர் 2024 முதல் முதலாம் ஆண்டு நர்சிங் மாணவர்களை ரேகிங் என்ற பெயரில் துன்புறுத்தி வந்துள்ளது.

இந்தத் துன்புறுத்தலை இனி தாங்க முடியாமல், அருகிலுள்ள காந்திநகர் காவல் நிலையத்தில் மூன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் புகார் அளித்தனர்.

அதனை தொடர்ந்து 5 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திய பின்னர் கல்லூரி நிர்வாகம் ஐந்து மாணவர்களையும் கல்லுாரியில் இருந்து இடைநீக்கம் செய்தது.


இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement