' என்னை சோதிக்காதீர்கள்...': செங்கோட்டையன் வேண்டுகோள்

11

கோபிச்செட்டிபாளையம்: '' அ.தி.மு.க., ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள்,'' என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செயல்படுத்திய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னூர் அருகே பாராட்டு விழா நடந்தது. இதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாத காரணத்தினால், இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது பேசு பொருளாகியது. இச்சூழ்நிலையில், இன்று காலை அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இதனை மறுத்த செங்கோட்டையன், ' அன்று பேசியது எல்லாம் அன்றோடு முடிந்தது. ஆள விடுங்க' எனக்கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., 108 வது பிறந்த நாள் விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது: என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. எத்தனை ஆண்டுகள் அரசியல் களத்தில் இருக்கிறேன், எத்தனை தலைவர்களை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன் என அனைவருக்கும் தெரியும். இங்கு வந்திருக்கும் நண்பர்களுக்கு, ஏதாவது கிடைக்குமா என தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். எதுவும் கிடைக்காது.

எம்.ஜி.ஆர்., ஜெயலிதா படம் இல்லை என்று தான் அன்றைய தினம் என்னை அழைக்க வந்தவர்களிடம் தெரிவித்தேன். கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பத்திரிகையாளர்கள் பரபரப்பாக்கினர். நான் புறக்கணிக்கவில்லை. அவர்களின் படம் இல்லாத காரணத்தினால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இன்று எத்தனையோ பேசிக் கொண்டு உள்ளனர். அது வேறு. அதை சொன்னால் வம்பாக போய்விடும். சர்ச்சையை ஏற்படுத்தி விடுவார்கள். எத்தனையே பேசுகிறார்கள். ஏதோ சொல்கிறார்கள். சொல்லிக் கொண்டு இருக்கட்டும். அதனைப் பற்றிக் கவலையில்லை.

எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அது தான் எனது வேண்டுகோள். நான் தெளிவாவும், தெளிந்த சிந்தனையோடும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுன் இருக்கிறேன். ஆனால், மாற்று முகாமில் இருந்து கருத்து சொல்கிறார்கள். அதனைப் பற்றிக் கவலையில்லை. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

Advertisement