தமிழ் இசை விழா நடத்த இசைப்பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை:'தமிழகத்தில் உள்ள இசைப்பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் கட்டாயம் தமிழ் இசை விழா நடத்த வேண்டும்' என, கலை பண்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
கலை பண்பாட்டு துறை சார்பில், திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சீர்காழி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அரசு இசைப்பள்ளிகள் செயல்படுகின்றன.
இவற்றில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய படிப்புகள் உள்ளன.
சென்னை, மதுரை, திருவையாறு, கோயம்புத்துார் ஆகிய ஊர்களில் உள்ள அரசு இசைக்கல்லுாரிகளில் குரலிசை, நட்டுவாங்கம், வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், தவில், நாதஸ்வரம் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
அரசு இசைப்பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் ஆண்டு விழா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பாடும் குரலிசை மாணவர்கள், பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தில் அமைந்த பிறமொழி பாடல்களை பாடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கர்நாடக சங்கீதம் அல்லது நாட்டுப்புற மெட்டுகளில் அமைந்த தமிழ் பாடல்களை கட்டாயம் பாட வேண்டும்.
கர்நாடக சங்கீதத்துக்கு, மூத்த இசையான தமிழ் இசையில் அமைந்த பாடல்களை மட்டும் பாடும் தமிழ் இசை விழாவையும் நடத்த வேண்டும் என, கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகள், இசைப்பள்ளி, கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.