திண்டுக்கல்லில் 3 டிகிரி வெப்பம் உயர்வு

சென்னை:'திண்டுக்கல், கரூர், நீலகிரி, திருப்பத்துார் மாவட்டங்களில், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உயர்த்துள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த 24 மணி நேரத்தில், பரவலாக வறண்ட வானிலையே காணப்பட்டது. அரக்கோணத்தில் அடர் பனிப்பொழிவும், சென்னை மற்றும் புறநகரில், லேசான பனிப்பொழிவும் காணப்பட்டது. நீலகிரி, திண்டுக்கல், கரூர், திருப்பத்துார் மாவட்டங்களில், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகி உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் கடல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக்கூடும். பிற பகுதிகளில், பிப்., 19 வரை வறண்ட வானிலை காணப்படும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், காலை லேசான பனிமூட்டம் காணப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன

காலை பனி மூட்டம், மதியம் வெயில் அதிகரிப்பது குறித்து, தன்னார்வை வானிலை ஆய்வாளர் ேஹமசந்தர் கூறியதாவது:

வளிமண்டலத்தின் உயர் அழுத்த பகுதியில், வறண்ட வடக்கு காற்று ஊடுருவல் காரணமாக, அதிகாலை பனிப்பொழிவு காணப்படுகிறது. இது, பிப்ரவரி இறுதியில் விலகும் போது, பனிப்பொழிவு படிப்படியாக குறையும்.

வளி மண்டலத்தில், கிழக்கு திசை வறண்ட காற்று ஊடுருவல் காரணமாக, பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கிறது. கோடை காலத்துக்கு முந்தைய நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதனால், நிலப்பகுதிகளில் வறண்ட வானிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மார்ச் முதல் வாரத்தில் காற்று மாறுபாட்டால், இது குறையும்.மார்ச் இரண்டாவது வாரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில், வெப்ப சலன மழை அல்லது கோடை மழை துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement